கரும்பு கிடைக்காதது கசப்பு தான்..மைக் கிடைத்தது மகிழ்ச்சி - சீமான் கொடுத்த அடடே விளக்கம்

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும் - சீமான்

Mar 27, 2024 - 15:36
கரும்பு கிடைக்காதது கசப்பு தான்..மைக் கிடைத்தது மகிழ்ச்சி - சீமான் கொடுத்த அடடே விளக்கம்

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும் எனவும் அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னத்தை மக்களவை தேர்தலில் பாரதிய  பிரதா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடைசி வரைக்கும் கரும்பு விவசாயி சின்னத்திற்காக மல்லுக்கட்டிய சீமான், வேறு வழியின்றி மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். 

 சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்றைய தினம் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "கரும்பு விவசாயி சின்னத்தை எப்படியாவது பெறவேண்டும் என கடைசி வரை போராடினோம். ஆனால், முடியவில்லை. 

சின்னத்தை இழந்தாலும் நம் எண்ணத்தை இழக்க கூடாது. அதனை மக்களிடையே கொண்டுபோய் சேர்ப்பதற்கு மைக்கை விட சிறந்த சின்னம் இல்லை என முடிவு செய்துவிட்டோம். ஆகப்பெரும் புரட்சியாளர்கள் தங்கள் முழக்கத்தை முன்வைத்த கருவி  மைக்" எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய சீமான், கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். கூட்டணி வைத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் கேட்ட சின்னம் வந்துள்ளது. எப்போதும் நான் கூட்டணி வைக்கமாட்டேன். 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்களை கொடுத்து எங்களை சுயேட்சையாக போட்டியிட வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். முன்பே சின்னம் கிடைத்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். ஆனால், இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். எனக்கு புதுச்சின்னம் கொடுத்தது போல் திமுக, அதிமுக, பாஜகவிற்கும் புதுச்சின்னம் கொடுக்க வேண்டும்" என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow