அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...
நீலகிரியில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய போலீசாரிடம் உரிய அனுமதி பெற்றிருந்தும் அதிமுகவினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலகிரி தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் உட்பட அதிமுகவினர் ஊட்டி காபி ஹவுஸ் பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் ஊட்டி காவல்துறையினர் வேண்டுமென்றே பல்வேறு தடுப்புளைப் போட்டு அதிமுகவினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்காமல் தாமதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். மேலும் அதிமுகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் திமுகவினரை திருப்திப்படுத்த அதிமுகவினர் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ள ஊட்டி காவல்துறைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தவறிழைத்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணைத்தை தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு வலியுறுத்துவதுடன் திமுகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டு பொய் புகார் பதிவு செய்த காவல்துறை மீது உரிய நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, தங்களது ஜனநாயக விரோத செயல்களுக்கு பதில் அளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?