பொங்கலுக்கு ரொக்கம் நாளை அறிவிப்பு? பரிசுத்தொகுப்பு விநியோகம் ஜன 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கலுக்கு எவ்வளவு ரொக்கம் வழங்குவது என நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது. இதனிடையே ஜன.8ல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி உள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, குடும்அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், பணம் இடம்பெறவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வர இரண்டு வாரங்களே உள்ள நிலையில், 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் சத்யபிரதா சாஹு நேற்று பிறப்பித்துள்ளார்.
அந்த அரசாணையில், 'பொங்கல் பரிசு தொகுப்பாக, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவற்றை, மொத்த செலவினத் தொகை 248.66 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.22 கோடி கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்ய, நிதி ஒதுக்கி அரசு ஆணையிடுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜன.8ல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளனர்.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 ம் தேதி முதல் டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

