சாதி வாரி கணக்கெடுப்பு முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடிக்கிறார்: அன்புமணி கவலை
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து பாமக அன்புமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அன்புமணி, சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காலை 11.45 மணியளவில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, இட ஒதுக்கீடு கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் தூங்குவது போல நடிக்கிறார்: அன்புமணி
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி: இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக நீதிமன்றம், மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இதற்கு பிறகும் முதல்வர் ஸ்டாலின் பொய் கூறி வருகிறார். தூங்குபவர்களை எழுப்பலாம்., தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடித்து வருகிறார்.
“தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம். ஆனால், திமுக ஆட்சியில் சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாமக 36 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வருகிறது. ஆனால், திமுக அரசோ சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசால்தான் நடத்த முடியும் என்ற பொய்யயை மீண்டும் மீண்டும் பொய்களை கூறி வருகிறது.
இப்போது இருக்கக்கூடிய சாதிவாரி கணக்கு என்பது 1931-ல் எடுக்கப்பட்ட கணக்கு. இதை வைத்துதான் தற்போது வரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல உரிமைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கேட்டுக் கொண்டு இருக்கிறோம். என பேசினார்.
அதிமுக, தவெக புறக்கணிப்பு
சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திமுக தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு அன்புமணி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று அமமுக சார்பில் செந்தமிழன், பாஜக சார்பில் கரு நாகராஜன் மற்றும் புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் ராமதாசு கோபம் அடைவர் என்பதற்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே போன்று தவெக அன்புமணியின் அழைப்பை நிரகாரித்தது.
தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாமக இளைஞரணி துணைச் செயலாளர் முருகன், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியவாறு ஆர்ப்பாட்ட மேடைக்கு பின்புறம் சென்று திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவரை தடுத்து நிறுத்திய கட்சி நிர்வாகிகள் . வாட்டர் பாட்டில்களில் இருந்த தண்ணீரை அவர்மீது ஊற்றி சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல்துறையினரிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
What's Your Reaction?

