மீண்டும் முருங்கை மரம் ஏறுதே.. உயரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்

22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.120 உயர்ந்து ரூ.54,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Apr 27, 2024 - 12:06
மீண்டும் முருங்கை மரம் ஏறுதே.. உயரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. 

தங்க நகைகளின் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். பண்டிகை நாட்களில் கால் சவரன் தங்கமாவது வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்பதால்தான் இந்தியர்கள் தங்கத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அவ்வப்போது குறைந்து மீண்டும் விலை உயர்ந்து கண்ணமூச்சி ஆடி வருகிறது தங்கம் விலை நிலவரம். 

மார்ச் 28ஆம் தேதி 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 6,250 ரூபாயை எட்டியது. இதனால் 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இதன் பின்னரும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 

தங்கம் விலை ஏப்ரல் மாதத்தில் ரூ.54,000த்தை தாண்டியது. ஏப்ரல் 19ஆம் தேதி புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை. 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன்  55,120 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்குபவர்கள் கலக்கமடைந்தனர். 

கடந்த 20ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. 22ஆம் தேதியன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 6,845 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் தடாலடியாக குறையத் தொடங்கியது.

கடந்த 23ஆம் தேதியன்று அதிகபட்சமாக கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து 6,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1,160 குறைந்து 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்த நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதியன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,730 க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,513க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,104க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் நேற்று (ஏப்ரல் 26) 45 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் அதிகரித்தது.  சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 6,755 ரூபாய்க்கும், சவரன் 54,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே இன்றைய தினம் ( ஏப்ரல் 27) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை  கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.120 உயர்ந்து ரூ.54,160 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் அட்சய திருதியை பண்டிகை வர உள்ள நிலையில் நகை வாங்குவோர் விலை உயர்வை பார்த்து கலக்கமடைந்துள்ளனர். ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நகை விற்பனையாளர்களும் நிபுணர்களும் கூறியது போலவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை குறைத்தால் அட்சய திருதியைக்கு வாங்கலாம் என்று இல்லத்தரசிகள் நினைத்திருந்த நிலையில் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல தங்கத்தின் விலை உயரத்தொடங்கியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow