குற்றவாளி நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை.. செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் நீதிபதி.. 2 பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி அப்பீல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றவாளி நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தண்டனையில் இருந்து தப்பியுள்ள 2 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஆக இருந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேரம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை உருவாக்கியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்வாக்குடன் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் சிலருக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை உயர்கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நிர்மலா தேவி பேசும் ஆடியோவை ரெக்கார்ட் செய்த மாணவிகள், பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதனை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த நிலையில், அந்த ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதனையடுத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமரஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்து இருந்தனர்.
இந்த வழக்கில் ஆளுநர் மாளிகையில் தொடர்புடையவர்களின் பெயர்களும் அடிபட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், விபச்சார தடுப்பு சட்டம், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டன.
வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில் நிர்மலாதேவி ஆஜராகாததால் நீதிமன்றம் தீர்ப்பை இன்றைய தினம் (ஏப்ரல் 29) தள்ளி வைத்தார் நீதிபதி. நிர்மலா தேவி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். இதில் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்காததால், அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மேலும், இந்த வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
அப்போது நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், "தண்டனையை குறைத்து வழங்க வேண்டும். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை தெரிவிக்க, தண்டனையை நாளை செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்ரல் 30) தள்ளி வைக்க வேண்டும் என வாதிட்டார். ஆனால், சி.பி.சி.ஐ.டி தரப்பு வழக்கறிஞரோ சந்திரசேகர் இன்றைக்கே தீர்ப்பு வழக்க வேண்டும் என முறையிட்டார். இதனால் வழக்கை பிற்பகல் 2:30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பின்னர் பிற்பகல் 2:50 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்.30) தண்டனை விவரம் வழங்கப்படும்" என அறிவித்து நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.
இதனிடையே மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் சிபிசிஐடி தரப்பு அரசு வழக்கறிஞர் எம்.சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போதுஅவர், “சமூகத்துக்கு தேவையான ஒரு தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியுள்ளது.
முதல் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், 2 மற்றும் 3-வது குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்களுக்கும் தண்டனை வழங்கக் கூடிய சாட்சிகள் இருப்பதாக அரசு தரப்பு கருதுகிறது. இது குறித்து மேல் முறையீடு செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
குற்றவாளி நிர்மலா தேவிக்கான தண்டனை நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இருந்து மதுரைக்கு பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?