சென்னையில் மீண்டும் தலைதூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம் - அடுத்தடுத்த சம்பவங்களால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்
மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டதாக வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரி, 12ஆம் வகுப்பு மாணவன், கார் ஓட்டுநர் குமார், நெல்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் இரண்டரை வயது குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவத்தில் கல்லூரி மாணவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச்சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு தர்சன் என்ற 5 வயது மகனும், இரண்டரை வயதில் புகழ் வேலன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. பாலமுருகன் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். நேற்று பாலமுருகன்- கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் பைக்கில் அழைத்து கொண்டு மெரீனா கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.பைக்கில் புகழ்வேலன் முன்னால் அமர்ந்து இருந்தார். வியாசர்பாடி மேம்பாலம் மேலே சென்றபோது மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து குழந்தை புகழ்வேலன் கழுத்தை அறுத்து வலியால் அலறி துடித்தார். உடனே எம்கேபி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குழந்தை புகழ்வேலனுக்கு 7 தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலமுருகன் வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டதாக வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரி, 12ஆம் வகுப்பு மாணவன், கார் ஓட்டுநர் குமார், நெல்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மொட்டை மாடியில் மாஞ்சா மூலம் காற்றாடி விட்டது தெரியவந்தது. கைதான நெல்சன் வீட்டில் சோதனை செய்த போது காற்றாடிகள், லொட்டாய்கள் மற்றும் நூல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மற்றவர்களின் வீட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதே போல வியாசர்பாடி மேம்பாலத்தில் மற்றொரு மாஞ்சா நூல் அறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஜிலானி பாஷா என்பவர் வியாசர்பாடி புதிய பாலத்தில் செல்லும்பொழுது மாஞ்சா நூல் அறுத்து காயம் அடைந்தார். ஜிலானி பாஷா கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த கும்பேஸ்வரன், யுவராஜ் மற்றும் இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். யுவராஜ் வீட்டில் வைத்திருந்த 85 பட்டங்கள், 2 லொட்டாய், 21 நூல் பண்டல்கள், 60 குச்சிகள், மாஞ்சா பவுடர் ஆகியவற்றை வியாசர்பாடி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஒரே நாளில் மாஞ்சா நூல் அறுத்த சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் மாஞ்சா நூலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை தமிழக அரசிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?