ரஷ்ய ராணுவத்தில் ஏமாற்றி சேர்ப்பு - எல்லையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

இதுபோன்ற ஒவ்வொரு வழக்குகள் குறித்தும் ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது

Feb 26, 2024 - 13:24
ரஷ்ய ராணுவத்தில் ஏமாற்றி சேர்ப்பு - எல்லையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க ரஷ்ய ராணுவத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தன் நாட்டு மக்களை போர்க்களத்தில் இறக்க ரஷ்யா தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆதலால், மாற்றுவழியில் போரை எதிர்கொள்ள நினைத்த ரஷ்யா, அங்குள்ள பிற நாட்டு மக்களை போர்க்களத்தில் இறக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ரஷ்யாவில் வேலைவாய்ப்பு எனக்கூறி அந்நாட்டு ராணுவத்தில் சில இந்திய இளைஞர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர்கள் அனைவரும், ரஷ்யாவில் தனியார் ராணுவம் என அழைக்கப்படும் வாக்னர் ராணுவக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாக்னர் ராணுவக்குழு ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ ராணுவம் என அழைக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், முகவர்களின் தலையீட்டோடு பாதுகாப்பு உதவியாளர்களாக ரஷ்யா அழைத்துவரப்பட்ட சில இந்திய இளைஞர்கள், ரஷ்ய போர் எல்லையில் தாங்கள் சிக்கித் தவிப்பதாக வீடியோக்களை வெளியிட்டனர். 

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளில் வசிக்கும் முகவர்கள், ரஷ்யாவில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று ராணுவத்தில் சேர்த்ததோடு, அப்பாவி இளைஞர்களிடம் இருந்து பணமும் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இந்திய இளைஞர்கள் சேர்க்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட இதுபோன்ற ஒவ்வொரு வழக்குகள் குறித்தும் ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  மேலும் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவை டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஏற்கனவே பல இந்தியர்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என்று அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow