தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதம்... பிரசாந்த் கிஷோர் கணிப்பு!!
இரு திராவிட கட்சிகளின் கூட்டு வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு கீழே சென்றுவிடும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் பாஜக இரட்டை இலக்க வாக்கு சதவிதத்தை பெறும் எனவும் பிரபல அரசியல் கணிப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலுக்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், தென்னிந்தியாவை நோக்கி தற்போது தேசியக் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடலில் பங்கேற்ற பிரபல அரசியல் கணிப்பாளரான பிரசாந்த் கிஷோர் தென்னிந்திய மாநிலங்களில் வரும் தேர்தலில் பாஜக கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் என்றும், தமிழகத்திலும் அதற்கு வியப்பிற்குரிய வகையில் இரண்டு இலக்க வாக்கு சதவிகிதம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
“தமிழகத்தில் குறிப்பாக 8 முதல் 12 சதவிதத்திற்கு இடையில் பாஜக வாக்குகளை பெறும். இதில் வெற்றித் தொகுதிகள் எத்தனை இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.இதுவரை பாஜகவுக்கு ஐந்து சதவிகிதம் வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன. இம்முறை அது இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் கூற்றுப்படி பார்த்தால், பாஜகவிற்கு கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜியின் உதவியால் திமுக கைப்பற்றி இருந்தது. ஆனால், இம்முறை செந்தில்பாலாஜி சிறையில் இருப்பது திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவே. இந்த சூழலை நன்றாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் பாஜக, கொங்கு மண்டலத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறது.பாஜக நினைப்பதுபோலவே அதற்கான வாய்ப்புகள் தற்போது அமைந்துள்ளதாலே, பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள் இதனுடன் ஒன்றிப்போகின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் 60 சதவிகிதத்திற்கு கீழே சென்றுவிடும் என பிரசாந்த் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் ஒரு கட்சி முக்கிய சக்தியாகவும், இன்னொரு கட்சி வலுவிழந்த நிலையிலும் இருக்கும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.இந்த இரு திராவிட கட்சிகளின் கூட்டு வாக்கு சதவீதம் 60 சதவீதத்திற்கு கீழே சென்றுவிடும்.இந்த இரண்டு கட்சிகளில் யார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தாலும் அவர்கள் பலம் இழந்துவிடுவார்கள் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.குறையும் திராவிட கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தால், பாஜகவின் வாக்கு சதவிகிதமே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்படுகிறது.
2014ல் கன்னியாகுமரி, 2019ல் ஏதுமில்லை என்றிருக்கும் பாஜகவிற்கு 2024 தேர்தல் கைக்கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
What's Your Reaction?