உச்சத்தில் தங்கம் விலை.. விடாது விரட்டும் வழிப்பறி கொள்ளையர்கள்.. அச்சத்தில் சென்னைவாசிகள்
: தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் பெண்களின் கழுத்தில் உள்ள தங்க நகைகளை வழிப்பறி செய்யும் கும்பலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரிப்பால் வெளியே நகை அணிந்து நடமாடவே பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கூறினாலும் தொடர் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்றைய தினம் சென்னையில் இருவேறு இடங்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
சென்னை அரும்பாக்கம் காந்தி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பவர் அபிநயா. இவருக்கு சொந்த ஊர் நாகர்கோயில். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரும்பாக்கத்தில் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து IT Course படித்து வருகிறார். நேற்று கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மாஸ்க் அணிந்து நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் அபிநயா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட அபிநயா நகையை பிடித்து கொண்டார். அதில் ஒன்றரை சவரன் தங்க நகையை அந்த பறித்து கொண்டு ஓடி விட்டார். இது குறித்து அபிநயா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதே போல சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் தினேஷ். இருவரும் ஃபால்ஸ் சீலிங் போடும் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை டிஎச் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து ஹரிகிருஷ்ணன் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
அப்போது தினேஷ் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த கும்பல் தினேஷின் காலில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் பாதிக்கப்பட்ட தினேஷ் கேஎம்சி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நகையை பறித்து சென்றதோடு கத்தியால் தாக்கி காயப்படுத்தியவர்கள் குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் ஹரி கிருஷ்ணன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் அண்ணா நகர் 19வது தெருவை சேர்ந்த மூதாட்டி நாகம்மாள் நேற்று இரவு அண்ணாநகர் ஜி பிளாக் வழியாக நடந்து கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். மூதாட்டி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் நகை பறிப்பு சம்பவங்களும், வழிப்பறி கொள்ளையர்களும் அதிகரித்து வருவது சென்னைவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?