பரீட்சை அட்டையால் மாணவனை தாக்கிய ஆசிரியர் தற்காலிகமாக பணியிடை நீக்கம்!
வகுப்பறையில் தேர்வு எழுதும் போது மாணவன் பேசியதாக, ஆசிரியர் பரீட்சை அட்டையினால் தாக்கியுள்ளார். இதனால் மாணவன் காயமடைந்த நிலையில், அதற்கு காரணமாக இருந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் விஜயகுமார். அதே பகுதியிலுள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த 20.03.2025 அன்று மாணவன் விஜயகுமார் வகுப்பறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது, மற்றொரு மாணவனிடம் பேசியதாக பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் விஜயகுமாரை தேர்வு எழுதும் பரீட்சை அட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் மாணவன் விஜயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மாணவனை மீட்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவனை ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மாணவனுக்கு 3 தையல்கள் போடப்பட்ட நிலையில், தற்போது மாணவன் நலமுடன் உள்ளார்.
ஆசிரியர் பணியிடை நீக்கம்:
மேலும் இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன்-யிடம் கேட்டபோது, பள்ளித் தேர்வுகள் நடைப்பெற்று வரும் சூழ்நிலையில், நான் மற்றொரு பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். இதனால் எங்கள் பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை என்று தெரிவித்தார்
மாணவனை தாக்கிய அறிவியல் ஆசிரியர் முருகதாஸினை தொடர்புக் கொள்ள பலமுறை முயன்றும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவனை தலையில் தாக்கிய ஆசிரியர் முருகதாஸ் என்பவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
What's Your Reaction?






