அரசின் முயற்சியால் ஊர் திரும்பினோம் -திருச்செந்தூரில் சிக்கிய பக்தர்கள் உருக்கம்

எங்களை இந்து சமய அறநிலைத்துறை பத்திரமாக மண்டபத்தில் தங்க வைத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.

Dec 21, 2023 - 13:28
Dec 21, 2023 - 19:13
அரசின் முயற்சியால்  ஊர் திரும்பினோம் -திருச்செந்தூரில் சிக்கிய பக்தர்கள் உருக்கம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையால் சொந்த ஊர் திரும்பினோம் என திருச்செந்தூர் சென்று சிக்கிக்கொண்ட பக்தர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 17-ந்தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நிலையில் பெருமழை வெள்ளத்தின் தாக்கத்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 700 பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் முடங்கினர்.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உண்ண உணவு மற்றும் மண்டபங்களில் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. 3 நாட்களாக அங்கு பக்தர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்களுக்கு சாப்பாடு போதுமான அளவில் வழங்கப்பட்டது. மின் இணைப்பு 3 நாட்களாக துண்டிக்கப்பட்டதால் செல்போன் சார்ஜ் செய்வதற்கும், குழந்தைகள் வைத்திருப்போர் கொசு கடியினாலும் மிகுந்த அவதிப்பட்டனர். 

அவர்களை திருச்செந்தூரில் இருந்து மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்ப கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உடனடியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அங்கு தவித்த பக்தர்களை கட்டணம் இல்லாமல்  நெல்லைக்கு அழைத்து வர பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

 முதல் கட்டமாக 7 பேருந்துகளில்  திருச்செந்தூர் கோவிலில் இருந்து பக்தர்கள் அனைவரும் ஏற்றப்பட்டு முனஞ்சிப்பட்டி வழியாக நெல்லை அனுப்பப்பட்டனர்.அதன்படி மதியம் 1 மணி அளவில் 4 பஸ்களில் சுமார் 300 பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அந்தந்த வழித்தட அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக எந்தவித கட்டணமும் பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படவில்லை.மேலும் புதிய பஸ் நிலையம் வந்து சேர்ந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் உணவும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து திருச்செந்தூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கூறுகையில், மழை வெள்ளத்திற்கு முன்பாக திருச்செந்தூர் சுவாமி தரிசனம் செய்ய வந்து மழை வெள்ளம் காரணமாக இங்கு மாட்டிக்கொண்டோம். எங்களை இந்து சமய அறநிலைத்துறை பத்திரமாக மண்டபத்தில் தங்க வைத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். மேலும் தற்போது மழை வெள்ளம் குறைந்த நிலையில் எங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோரிக்கை வைத்த போது உடனடியாக அரசு சார்பில் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் எங்களை நெல்லை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து எங்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்று உருக்கமாக தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow