வைரலாகும் குழந்தை கடத்தல் வீடியோ! உண்மையை போட்டுடைத்த போலீசார்...
சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாகப் பரவி வரும் வீடியோ காட்சிகள் வதந்தி என சென்னை பெருநகர் காவல்துறை ஆய்வு செய்து விளக்கமளித்துள்ளது.
கடந்த சில தினங்களாகப் பர்தா அணிந்து வரும் நபர் ஒருவர், சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் சிறுவனிடம் பேசுவது போலச் சென்று மயக்க மருந்து கொடுத்து பின் வாகனத்தில் கடத்தி செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சென்னை காவல் துறையிடம் பலர் விளக்கம் கேட்டிருந்தனர். இதையடுத்து, அந்த வீடியோவை ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல்துறை, அது 2022ஆம் ஆண்டு வெளியான வீடியோ என்றும், எகிப்தில் படமாக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ என்றும் விளக்கமளித்துள்ளன.
மேலும், இதுபோன்ற சமூக அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?