பச்சைக்கிளிகள் தோளோடு.. பறவைகளுக்கு உணவளிக்கும் கிளிகளின் காதலர் 'பேரட் சுதர்சன்' - எக்ஸ்க்ளூசிவ்
சென்னை: பறவையினங்களுக்கும் கால்நடைகளுக்கும் உணவும் தண்ணீரும் கொடுத்து பாதுகாத்து வருகிறார் பேரட் சுதர்சன் என்ற கிளிகளின் காதலர். யார் இந்த பேரட் சுதர்சன் (Parrot Sudarson)? எதற்காக இவர் தினமும் கிளிகளுக்கு உணவளிக்கிறார்? கிளிகளுக்கு உணவளிக்கும் தனது பயணம் பற்றி குமுதம் தொலைக்காட்சி, இணையதளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் மனிதர்களே தண்ணீருக்காக தவித்து வரும் சூழ்நிலையில் கிளிகள், புறாக்களுக்கு கடந்த 14 ஆண்டு காலமாக உணவளித்து வருகிறார் சுதர்சன் என்கிற பறவையின் காதலர். சேவை மனப்பான்மையோடு செய்து வரும் பணி குறித்து பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஐய்யா முதலி தெருவில் வசித்து வரும் சுதர்சன் வீட்டின் மொட்டை மாடியில் தினசரியும் ஆயிரக்கணக்கான கிளிகளும் புறாக்களும் வந்து வயிறார சாப்பிட்டு விட்டு தாகம் தீர தண்ணீர் பருகி விட்டு செல்லும். இவரது சேவையில் அவரது மனைவி வித்யாவும் இணைந்துள்ளார்.
தினந்தோறும் காலையிலும் மாலையிலும் இரண்டு வேலைகளிலும் தன் பிள்ளைகள் போல் கருதி ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதால் இவரை பேரட் சுதர்சன் (Parrot Sudarson) என்று அழைக்கின்றனர். நகரப் பகுதிகளில் அரிதாக காணப்படும் கிளிகள் இவரது வீட்டில் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து இரை எடுத்து செல்வதை மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
இயற்கையை எப்படி காப்பாற்ற வேண்டும், பறவைகளை எப்படி காப்பாற்ற வேண்டும் என புரியும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கிறார் சுதர்சன். கோடை காலத்தில் நீர், உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் பறவை இனங்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு, நீர் வைப்பது குறித்த முக்கியத்துவத்தையும் கிளிகளை பார்க்க வரும் குழந்தைகள் பெரியவர்களிடம் பேசுகிறார் சுதர்சன். தனியார் பள்ளிகளுக்கு சென்று அவர் மாணவர்கள் இடையே இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
கிளிகள் மற்றும் பறவைகளுக்கு உணவு அளிப்பது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பேரட் சுதர்சன். 14 ஆண்டுகளாக நான் பறவைகளுக்கு உணவு தருகிறேன். கிளிகளுக்கு மட்டுமே உணவு தர வேண்டும் என்று வைப்பதில்லை. இரை கிடைக்காத அனைத்து பறவைகளுக்கும் சேர்த்துதான் தானியம், அரிசி, பழங்களை வைக்கிறேன் என்கிறார் சுதர்சன்.
100 கிளிகள் மட்டுமே முதலில் வந்தது. நாட்கள் செல்லச் செல்ல கிளிகளின் எண்ணிக்கை 3000 வரை உயர்ந்து விட்டது. ஜனவரியில் 10 ஆயிரம் கிளிகள் வரை இரை தேடி இவரது வீட்டிற்கு வருமாம். கிளிகளுக்கு தினமும் ஊறவைத்த புழுங்கல் அரிசி, காலத்துக்கேற்ப கிடைக்கும் பழங்கள், வேர்கடலை போன்றவற்றை வைக்கிறாராம் சுதர்சன்.
புறாக்களுக்கு கோதுமையும் சிட்டுக்குருவிக்கு கம்பு போன்றவற்றை தருகிறார். கிளிகளுக்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும் என்பதால் தினமும் 8 கிலோ வேர்க்கடலையை தருகிறார். தினமும் 30 முதல் 40 கிலோ வரை ஊறவைத்த அரிசியை தருகிறார். குளிர்காலத்தில் தினமும் 60 கிலோவிற்கு மேல் அரிசி அளிப்பதாகவும் தெரிவிக்கிறார் சுதர்சன்.
தினசரியும் பறவைகளுக்காக பல ஆயிரம் செலவு செய்யும் சுதர்சன் தனது செலவை குறைத்துக்கொண்டுள்ளார். பாரிமுனை பகுதிகளில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள சுதர்சன், தனக்கு வரும் வருமானத்தை வைத்து கிளிகளுக்கும் பறவைகளுக்கும் உணவு தருகிறார்.
பறவைகளின் வசிப்பிடங்களுக்காக இவர் ஆயிரக்கணக்கான மரங்களையும் நட்டு பராமரித்து வருகிறார். இயற்கையை மீட்டுக்கொடுப்பதே பறவையினங்களுக்கு தான் செய்யும் கைமாறு என்கிறார் சுதர்சன். மரங்களை வளர்ப்பதன் மூலம் புவி வெப்பமடைதல் குறையும் என்றும், ஆக்சிஜன் அதிக அளவில் கிடைக்கும் என்றும் அறிவியல் ரீதியாக பேசுகிறார் சுதர்சன். இயற்கையை சார்ந்துதான் உயிரினங்கள் இருப்பதாகவும் இயற்கையை அழித்துவிட்டால் வருங்காலத்தில் உயிரினங்கள் அழிந்து விடும் என்றும் கூறுகிறார் சுதர்சன்.
கிளிகளுக்கு உணவு தருவதை பார்ப்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சுதர்சன் வீட்டிற்கு வந்து செல்கின்றனர். இதற்காக இவர் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. பறவைகள் மட்டுமல்லாது, பூனைகள், ஆடுகளுக்கும் உணவு தருகிறார் சுதர்சன்.
கோடை காலம் என்பதால் உணவு, நீர் போன்றவை கிடைக்காமல் பறவைகள் மற்றும் விலங்குகள் கஷ்டப்பட்டு வருகின்றன. நம்மால் முடிந்தவரை உணவளிக்க வேண்டும். இயற்கை மற்றும் பறவை இனத்தை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பள்ளி அளவில் இதனை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் சுதர்சன்.
What's Your Reaction?