பல ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரிக்கு இந்த நிலைமையா? வைரலாகும் வன்முறை

Feb 14, 2024 - 15:11
Feb 14, 2024 - 17:58
பல ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரிக்கு இந்த நிலைமையா? வைரலாகும் வன்முறை

சென்னையை அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக திகழும் பச்சையப்பன் கல்லூரி, 1842-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாட்டில் தனியாரால் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெயரைப் பெற்றதாகும். வள்ளல் பச்சையப்ப முதலியாரின் ஆசைப்படி பள்ளியாக உருவாக்கப்பட்டு, 1889-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்ந்தது.

அதிலிருந்து தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றும் முக்கிய தலைவர்கள் உருவாகும் இடமாக பச்சையப்பன் கல்லூரி மாறியது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை தொடங்கி, க.அன்பழகன், நெடுஞ்செழியன், துரைமுருகன், கணிதமேதை ராமானுஜம், பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் மு.வரதராசனார், ஆர்.எஸ்.மனோகர், எனப்பட்டியல் நீண்டு, கவிஞர் வைரமுத்து நா.முத்துக்குமார் என தொடர்ந்துகொண்டே போகும்.

மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற தேசிய தலைவர்களும் வந்து உரையாற்றிய இடமாக திகழ்ந்த பச்சையப்பன் கல்லூரி, லட்சக்கணக்கான மாணவர்களை சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களை உருவாக்கியது, ஏழை எளிய மாணவர்கள் பலர் பயின்று, தங்கள் வாழ்க்கையில் கல்வியின் ஒளி கண்ட பச்சையப்பன் கல்லூரி, தற்போதோ தலைகீழ் நிலைமையைக் கண்டு தவித்து வருவதே நிதர்சனம்.

முன்பெல்லாம் பச்சையப்பன் கல்லூரி என்ற பெயரைக் கேட்டு மரியாதை செலுத்திய தமிழ் மக்கள், இப்போது முகம் சுழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இரண்டு நிலைமைகளுக்கும் காரணம் அதில் படித்த மாணவர்களின் நடவடிக்கைகள் என்பதே வேடிக்கையான விஷயம்.

பிற கல்லூரி மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மோதல், அரசுப் பேருந்துகளில் ரூட் தல விவகாரம், கல்லூரியின் நிர்வாகத்திலும் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு என, பெயர்போன கல்லூரியின் பெயர் நாளுக்கு நாள் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதில், அண்மையில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்திக் கொண்ட வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. வளர்த்தெடுப்பதே கலாசாரமாக வாழ்ந்த பச்சையப்பன் கல்லூரி, வன்முறைக் கலாசாரத்தின் கூடமாக இருப்பது காலத்தின் கொடுமை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow