கடல் அலையில் சிக்கி பலியான பயிற்சி மருத்துவர்கள்.. முதலமைச்சர் இரங்கல் ! நிவாரணமும் விரைவில் வரும் !
கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் திருச்சி SRM மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 6 பேரும் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து இன்று காலை திற்பரப்பு அருவிக்கு சென்ற அவர்கள், தண்ணீர் குறைவாக கொட்டியதால் அங்கிருந்து ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது கடலில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேரையும் ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், விரைந்து சென்று சர்வதர்ஷித் மற்றும் நேசி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன் ஷாம், வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி ஆகிய 4 பேரும் மாயமான நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின.
அதேநேரம், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சர்வதர்ஷித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
இந்நிலையில், பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
What's Your Reaction?