சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடி.. என்.ஐ.ஏ.வுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் கடிதம்.. புது வழக்கு பாயுமா..?

May 6, 2024 - 19:09
சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடி.. என்.ஐ.ஏ.வுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் கடிதம்.. புது வழக்கு பாயுமா..?

டெல்லி சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை விடுவிக்க, அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.134 கோடி பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.

பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் அமெரிக்கா மற்றும் கனடாவில் "சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்" என்ற அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராக உள்ளார். இந்த அமைப்பு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி, தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் குர்பத்வந்த் சிங் பன்னூன் வெளியிட்ட வீடியோவில், டெல்லி சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை விடுவிப்பதற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். 2014 - 2022ஆம் ஆண்டு வரை கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி வரை நிதி அளித்ததாகவும் , ஆனால் அவர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் குர்பத்வந்த் சிங் எச்சரித்திருந்தார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர், 31 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக குர்பத்வந்த் சிங்கின் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்கத்தான் கெஜ்ரிவால் பணம் பெற்றதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடம் இருந்த நிதி பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணை நடத்த பரிந்துரைத்து, துணைநிலை ஆளுநர் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு, துணைநிலை ஆளுநரின் இந்த நடவடிக்கை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow