குலசை ராக்கெட் விளம்பரத்தில் சீன அடையாளம்... தவறை ஒப்புக்கொண்ட அமைச்சர்!
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அப்படி அரசியல் பேசியது, நாட்டின் பிரதமர் என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தவறுதலாக சீன கொடி இடம்பெற்றுவிட்டதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "ராக்கெட் ஏவுதளம் முதன்முதலில் ஆரம்பிக்க குரல் கொடுத்தது கலைஞரும், அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும் தான். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலினும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியும் தான் இருக்கிறார்கள். அதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில் சீன கொடியுடன் அச்சிடப்பட்டு சிறு தவறு நடந்துவிட்டது. தெரியாமல் நடந்த தவறு அது. அதில் எந்த நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.
"தமிழ்நாடு அரசுக்கு இந்தியாவின் மீது அதிக பற்று இருக்கிறது. ஒரு அரசு விழாவில் திட்டத்தையும், அதன் பயனையும், தொடங்க இருக்கும் புதிய திட்டங்களையும் பற்றி பேசுவார்களே தவிர, அரசியல் பிரசாரம் செய்ய மாட்டார்கள். நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் அப்படி அரசியல் பேசியது நாட்டின் பிரதமர் என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது."
திமுக தனித்து நின்று டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்விக்கு பதிலளித்த அவர், "எம்பி கனிமொழி மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதற்கு பதில் சொல்லிவிட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிதான் வெற்றி பெறப்போகிறது" என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
What's Your Reaction?