"கடுமையான விதிமீறல்..." ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!
கடுமையான விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரட்சூத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலைக்கு சீல் வைத்த நடவடிக்கை சரியானது என தமிழ்நாடு அரசு வாதிட்ட நிலையில், காற்றுமாசு குறித்த புகாரில் உண்மை இல்லை என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆலையை மூடுவது நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்றாலும் தொடர் விதிமீறல், பாதிப்புகளை கருத்தில்கொண்டு ஆலையை மூடியது சரியே என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையால் தேசத்தின் உற்பத்தி சொத்துகளுக்கு பங்களித்து வேலைவாய்ப்பு - வருவாய் உயர்கிறது என்றபோதும் சுகாதாரக் கொள்கைகள் நியாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் கூறினர். ஆலைக்கு அருகே வசிப்பவர்களின் உடல்நலன் மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது எனவும் மக்களை பாதுகாக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர். மீண்டும் மீண்டும் விதிகளை மீறி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டது நிரூபிக்கப்படாததால் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை சுட்டிக்காட்டி நீதிபதிகள் பாராட்டினர். தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
What's Your Reaction?