மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்.. 30 ஆண்டு கால பயணம்.. வைகோ சாதித்தாரா? சறுக்கினாரா?

வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இன்றுடன் ( மே 6) 30 ஆண்டு காலம் நிறைவடைகிறது. 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மதிமுகவின் அரசியல் பயணம் எப்படிப்பட்டது? பொதுச்செயலாளர் வைகோ சாதித்தாரா? சறுக்கினாரா என பார்க்கலாம்.

May 6, 2024 - 07:42
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம்.. 30 ஆண்டு கால பயணம்.. வைகோ சாதித்தாரா? சறுக்கினாரா?

அக்னி நட்சத்திர காலம் ஆரம்பத்தில் திமுகவில் கடந்த 1994ஆம் ஆண்டு ஒரு பிரளயமே உருவானது. ஆம் திமுகவின் போர்வாள், பிரச்சார பீரங்கி என்றெல்லாம் புகழப்பட்ட வைகோ எனப்படும் வை.கோபால்சாமி திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை உருவாக்கிய நாள் மே 6, 1994. நாளைய தினம் மே 6 ஆம் தேதியுடன் மதிமுக என்ற கட்சி உதயமாகி 30 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது.

மதிமுக 30: மதிமுக 31ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக, அதிமுக என்ற கட்சிகள் மட்டுமே களமாடிக்கொண்டிருந்த நேரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக இதே கால கட்டத்தில் மிகப் பெரிய ஆரவாரத்துடன் உருவானது மதிமுக. கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு மாற்றாக வைகோ உருவெடுத்தார். 

திமுகவில் வைகோ: அண்ணாவின் தலைமையிலான திமுகவில் எத்தனையோ மிகப்பெரிய ஆளுமைகள் இருந்தாலும் பலராலும் அதிகம் அறியப்பட்டவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர்தான். அண்ணாவின் மறைவிக்குப் பிறகு முதல்வரானார் கருணாநிதி. அவருக்கு ஆதரவாக இருந்தவர் எம்ஜிஆர். திமுகவின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் பேச்சு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வை. கோபால்சாமி என்கிற வைகோ 1964ஆம் ஆண்டு கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் பேசி அரசியல் வாழ்வில் வைகோ அடியெடுத்து வைத்தார். 

கருணாநிதியின் செல்லப்பிள்ளை: திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறி 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய பின்னர் கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக திமுகவில் வைகோ வலம் வந்தார். திமுக என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய் தளபதியாய் கருணாநிதியின் அன்புத்தம்பியாய் தளபதியாய் விளங்கியவர்தான் வைகோ.

தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். திமுக சார்பில் 20 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த வைகோவுக்கு கருணாநிதிக்கு அடுத்தார்போல், கட்சியிலும், தொண்டர்கள் மத்தியிலும் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அதே அளவுக்கு கட்சியில் போட்டியும் உருவானது.

இலங்கை பயணம்: திமுக எம்.பி.யாக இருந்த வைகோ, 1989ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி திமுக தலைமையிடம் அனுமதி பெறாமல் இலங்கை சென்று  23 நாட்களுக்குப் பின் தமிழகம் திரும்பிய வைகோவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கியது. தனது தவறுக்கு வைகோ திமுக தலைமையிடமும், செயற்குழுவிடமும் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்துக்குப் பின் வைகோ, திமுகவில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார்.

திமுக ஆட்சி கலைப்பு: வைகோவின் இலங்கை பயணம் காரணமாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி 1991ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில்  திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவை எல்லாம் வைகோ மீது திமுக தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. 

திமுக ஆட்சிக் கலைப்புக்கு வைகோ மறைமுகமாகக் காரணமாகிவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. திமுக கூட்டங்களுக்கு பேசுவதற்கு கூட வைகோவை அழைப்பதில் திமுக தலைமை கட்டுப்பாடு கொண்டு வந்தது. கடந்த 1991ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி திமுக செயற்குழுவில் வைகோவை நீக்க முடிவு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அந்த முடிவு பின்னர் கைவிடப்பட்டது

வைகோ வெளியேற்றம்: திமுகவில் இருந்து வைகோ ஓரங்கட்டப்பட்டாலும் அவருக்கான செல்வாக்கு தொண்டர்கள் மத்தியில் குறையவில்லை. இந்நிலையில்தான் அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் வை.கோபால்சாமியின் ஆதாயத்திற்காக உங்களைத் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குக் அதிகாரபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதமும், அதைத் தொடர்ந்து கருணாநிதியின் பேட்டியும் மதிமுக உருவாக விதையாக அமைந்தது. 

இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வைகோ, மத்திய அரசின் உளவுத் துறையினர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கருணாநிதி பலமுறை கூறியிருப்பதை நினைவுகூர்கிறேன். என்னால் திமுக தலைவர் கலைஞருக்கோ கட்சிக்கோ கடுகளவும் கேடுவராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். 

வைகோவிற்கு ஆதரவு: இதன் உச்சகட்டமாக வைகோவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் பொதுச் செயலாளர் க. அன்பழகன். முடிவில் 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வைகோ. அவருடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பிரிந்து சென்றனர். வைகோவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். 

வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். 

திமுகவில் பிளவு: 1993ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். திமுகவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். வைகோ வெளியேறியது, திமுகவில் “செங்குத்தான பெரும்பிளவு” என்று தமிழக அரசியலில் வர்ணிக்கப்பட்டது. அந்த அளவுக்கு வைகோவின் பின்னால் தொண்டர்கள் திரண்டனர்.

வைகோவிற்கு ஆதரவு: எம்ஜிஆர் கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் அவரோடு செல்லவில்லை. ஆனால், வைகோ வெளியேறிய போது போர் குணம் கொண்ட பல  மாவட்டச் செயலாளர்கள், தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வைகோவின் பக்கம் நின்றனர்.

மதிமுக உதயம்: திமுகவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரினார் வைகோ அது நடக்காமல் போனது. இதனையடுத்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6ஆம் நாள், சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு புதிய அமைப்பின் கொடி கொள்கை குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்து, வெளியிட்டது.

வைகோ நடைபயணம்: இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய வைகோ, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்றாக அந்தக் கட்சியை முன்வைத்தார். வைகோ மதிமுக தொடங்கிய பின், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உருவானது. அவர் நடத்திய மாநாடுகள், பேரணிகள் அனைத்திலும் திரண்ட தொண்டர்கள் கூட்டம் திமுக, அதிமுக தலைமைக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. 

அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக என 1500 கி.மீ . தொலைவு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இது தமிழகத்தில் வைகோவுக்கான ஆதரவை வலுப்படுத்தியது

அரசியல் வாழ்க்கை: ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை, லோக்சபா பொதுத் தேர்தலில் மதிமுக உடன் அன்றைய மத்திய காங்கிரசின் எதிர்கட்சியான ஜனதா தளம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது. தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பாட்டாளி மக்கள் கட்சி.  இதனால், அந்தக் கூட்டணி உருவாகாமல் கலைந்து போனது. 

மதிமுகவும் பம்பரமும்: அதே நேரத்தில் ம.தி.மு.க உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டசபைத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டசபைத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. அப்போது ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. 

மதிமுகவின் வளர்ச்சி: 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராக கடும் விமர்சகராக இருந்த வைகோ, 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக சிவகாசி, பொள்ளாச்சி, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி அமைய மதிமுக ஆதரவு அளித்தது. முதல் முறையாக வைகோ அவர் கட்சியின் சார்பாக மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்போற்றார்.  இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது.

மத்திய அமைச்சரவையில் மதிமுக: திமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த வைகோ, முதல்முறையாக 1999ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.  அந்தத் தேர்தலில் பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு,  சிவகாசி ஆகிய தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் மதிமுக சார்பில் இரண்டு எம்பிக்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர். 

தவறான முடிவு: 2001 சட்டசபைத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையால் மதிமுக தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பாஜகவிற்கு  23 இடங்களை அளித்தது.  அதே நேரத்தில் எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ.

இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 

பொடா சட்டத்தில் கைது: இது ஒரு புறம் இருக்க மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி, மதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ,கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகள் மீதான நிலைப்பாடு குறித்து பேசினார் . அப்போது அவர் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்றார். 

அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. அந்தநேரத்தில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, இளவரசன், அழகு சுந்தரம், சிவந்தியப்பன், பூமிநாதன், கணேசன், பி.எஸ்.மணியம், நாகராஜன் ஆகிய 9 பேர் மீது ‘பொடா’ சட்டத்தின் கீழ், தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். வைகோவை 2002ஆம் ஆண்டு, ஜூலை 11 ஆம் தேதி அதிகாலை, சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வைகோவை போலீஸார் கைது செய்தனர். இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்திற்கு ஆதரவாக பேசிய வைகோவே, அந்த சட்டசத்தின் கீழ் 
கைது செய்யப்பட்டார்.

வைகோ வெற்றி: அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன.  வேலூர் சிறைக்கு சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. இது மீண்டும் திமுக உடனான கூட்டணிக்கு அச்சாரமிட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக - காங்கிரஸ் அங்கம் வகிக்கித்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக  சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.
அப்போது சிவகாசி தொகுதியில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற தொண்டர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. நான்கு தொகுதிகளிலும் மதிமுக வெற்றி பெற்றது. 

அதிமுக - மதிமுக கூட்டணி: 2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய மதிமுகவிற்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது திமுக. இதையடுத்து, திடீரென திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் இணைந்தார் வைகோ. 2002ஆம் ஆண்டு வைகோவை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். 

இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. இத்தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

தேர்தல் புறக்கணிப்பு: 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுகவிற்கு கேட்ட தொகுதிகளை தராத காரணத்தால் கூட்டணியிலிருந்து விலகியது. இதை தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக அப்போது இது விமர்சிக்கப்பட்டது.

சரிந்த செல்வாக்கு: வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. கோபம், அவசர முடிவு போன்றவை வைகோவின் சறுக்கலுக்கும் மதிமுகவின் சரிவுக்கும் காரணமாக அமைந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை ஆதரித்து வைகோ பிரச்சாரம் செய்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக  உடன் கூட்டணி சேராமல் மதிமுக தலைமையில் வைகோ உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை  முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து போட்டியிட்டனர். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என அக்கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு  அந்த தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்தது. 

திமுக உடன் மீண்டும் கூட்டணி: கருணாநிதி மறைவிற்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார் வைகோ.   வைகோவும், ஸ்டாலினும் தோழமை பாராட்டி வந்த நிலையில் வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்தார் ஸ்டாலின்.1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 30 வருடங்கள் கழித்து நான்காவது முறையாக வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுகவுக்கு 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் திமுக தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களில் மதிமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம்.

மதிமுகவில்  வாரிசு அரசியல்: தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். வாரிசு களமிறங்கியதால் மதிமுகவை விட்டு பலர் விலகினார்கள். ஆனால் அதைப்பற்றி வைகோ கவலைப்படவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் துரை வைகோ. 

திமுகவில் மதிமுக இணையப்போகிறது என்று பலரும் பேசி வந்த நிலையில் தனக்குப் பின்னர் தனது மகன் கட்சியை வழி நடத்துவார் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் வைகோ. எனவேதான் செத்தாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று கண்ணீர் மல்க கூறினார் துரை வைகோ. 

சாதனையா? சறுக்கலா: மதிமுக தொடங்கப்பட்டு 30ஆண்டு காலம் நிறைவடைந்து விட்டது. 30 ஆண்டு காலம் வாழ்ந்தவர்களும் இல்லை 30 ஆண்டு காலம் தாழ்ந்தவர்களும் இல்லை என்பார்கள். மதிமுக என்ற கட்சி 31வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த கட்சியின் வளர்ச்சி இனி வரும் காலங்களில் எப்படி இருக்கப்போகிறது என்பது அதனை வழி நடத்தப்போகும் துரை வைகோவின் கைகளில்தான் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow