லக்னோ அணியை பந்தாடிய கொல்கத்தா.. 8 வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்

May 6, 2024 - 08:39
லக்னோ அணியை பந்தாடிய கொல்கத்தா.. 8 வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 5) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் நேற்று (மே 5)  நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

கொல்கத்தா அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடிய வந்த நிலையில் 32 ரன்களில் சால்ட் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுனில் நரைனும், ரகுவன்ஷியும் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.  6 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என லக்னோ அணி வீசிய பந்துகளை திசையெங்கும் அடித்து பறக்கவிட்டு சுனில், 81 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்தடுத்து ரஷல் 12 ரன்களிலும் ரகுவன்ஷி 32 ரன்களிலும் ரிங்கு சிங் 16 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மேலும், ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். 

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து 236 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி விளையாடினர். இதில் கே.எல்.ராகுல் 25 ரன்களிலும், அர்ஷின் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில் 36 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். தீபக் ஹூடா 5 ரன்களில் LBW முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் 16.1 ஓவர்களில் லக்னோ அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்று தனது 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow