பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
செம்மொழி அந்தஸ்து என்பது ஒரு மொழியின் செழுமைக்கான அங்கீகாரமாய் விளங்குவது. ஒரு மொழியில் உண்டாகியிருக்கும் இலக்கியப் படைப்பு மற்றும் கலைப் படைப்பின் செழுமையைக் கொண்டே அந்த மொழியின் செழுமை தீர்மானிக்கப்படுகிறது. ஒரு மொழியில் எந்த அளவுக்கு செழுமையான, பழமையான இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன, பிற மொழிகளில் இல்லாத தனித்துவம் அந்த மொழிக்கு என்ன இருக்கிறது என்பதையெல்லாம் மதிப்பிட்டுதான் செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதலாக கடந்த 2004ம் ஆண்டு தமிழ் மொழிக்குதான் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. இறுதியாக கடந்த 2014ம் ஆண்டு ஒடியா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் பெங்காலி, மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் சிலவற்றுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது. இச்சூழலில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், மத்திய அமைச்சரவையின் முடிவுகள் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
அப்போது, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மத்திய அமைச்சரவையின் இந்த முடிவினை மேற்கு வங்கம், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் வரவேற்றிருக்கின்றனர்.
செம்மொழி அந்தஸ்து என்பது ஒரு மொழியின் பெருமையை உலகறியச் செய்வது. ஆகவே இந்த அந்தஸ்தினைப் பெரும் மொழியினர் அனைவரும் இதனால் பெருமை கொண்டுள்ளனர்.
What's Your Reaction?