வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 35 பேர் உயிரிழப்பு... 1.61 லட்சம் மக்கள் பரிதவிப்பு!
வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தை தாக்குபிடிக்க முடியாமல் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திஸ்பூர்: அசாமில் கனமழை பெய்து வருவதால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தின் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிஸ்வநாத் லக்கிம்பூர், ஹோஜாய், போங்கைகான், நல்பாரி, தமுல்பூர், உடல்குரி, தர்ராங், தேமாஜி, ஹைலகண்டி, கரீம்கஞ்ச், ஹைலகண்டி, கோல்பாரா, நாகோன், சிராங் மற்றும் கோக்ரஜார் ஆகிய மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 1.61 லட்சம் மக்கள் பரிதவிப்புடன் உள்ளனர்.
பிரம்மபுத்திரா மற்றும் கோபிலி நதிகளில் வெள்ளநீர் அபய கட்டத்தை தாண்டி செல்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.
வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தை தாக்குபிடிக்க முடியாமல் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சில வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 470 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
1378.64 ஹெக்டேர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. 54,877 விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மீட்பு படையால் மீட்கப்படும் மக்களை தங்க வைக்க 50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் கவுகாத்தி முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் உணவுவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அசாமில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிவராண முகாம்களின் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை தடையின்றி செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
What's Your Reaction?