தென்காசி: HIV-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்.. அவமானப்படுத்தும் மேலாளர்.. நடவடிக்கை எடுக்குமா மனித உரிமை ஆணையம்...?
சங்கரன்கோவிலில் HIV-யால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளரை சக ஊழியர்கள், மேலாளர் உள்ளிட்டோர் மனதளவில் காயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் HIV நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தெரிகிறது. அவர் மூலம் அந்தப் பெண்ணுக்கும் HIV பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தான் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனையில் HIV நோயைக் காரணம் காட்டி, மேலாளர் சுகந்தி மற்றும் மேற்பார்வையாளர் முத்தையா ஆகியோர் தன்னை தரக்குறைவாக நடத்துவதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சக ஊழியர்களை தன்னுடன் பேசக் கூடாது எனக் கூறுவதாகவும், ஊதியம் குறைவாக கொடுப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சளுக்கு ஆளான அவர், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், மனித உரிமை ஆணையமும் தலையிட்டு தன்னை மனதளவில் காயப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?