மளமளவென நிரம்பும் சிறுவாணி அணை.. துள்ளும் கோவை மக்கள்.. குடிநீர் பிரச்சினை இனி இல்லை

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை சிறுவாணி அணை நீர்மட்டம் 20 அடியை தாண்டியுள்ளதால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்கும் சிறுவாணி தண்ணீர் சுவையான குடிநீர். உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என்ற பெயர் பெற்றது சிறுவாணி தண்ணீர் கோவை மாநகர மக்களின் தாகத்தைத் தீர்க்கும் நீருமாக இருப்பதுதான் சிறுவாணி நீர்.

Jun 29, 2024 - 10:15
மளமளவென நிரம்பும் சிறுவாணி அணை.. துள்ளும் கோவை மக்கள்.. குடிநீர் பிரச்சினை இனி இல்லை

குடிநீருக்கு என்று இயற்கையிலேயே ஒரு சுவை உள்ளது.சிறுவாணி தண்ணீரின் சுவை அலாதியானது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகராகமாக உருவெடுத்திருப்பதற்கு அடித்தளமே இந்த சிறுவாணி தண்ணீர்தான். சிறுவாணி நீர் கோவை மக்களை வந்தடைய பல போராட்டங்களையும், தியாகங்களையும் சந்தித்திருக்கிறது
 

கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கோவை மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அது தவிர, வழியோரம் உள்ள 22க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் சிறுவாணி அணையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். கடந்த ஆண்டு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டது. தினமும் நான்கு கோடி லிட்டர் தண்ணீர் தான் எடுக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 9 அடிக்கு கீழ் சென்றது. 

எனவே தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து அனைவரும் காத்து இருந்தனர். இந்த நிலையில் வழக்கத்திற்கு முன்பாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை மட்டுமே இருந்து வந்தது. இதற்கு இடையே கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது அதிகபட்சமாக அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் 13 செ.மீ மழை பதிவானது. எனவே அணையின் நீர்மட்டம் கிடு , கிடுவென உயர்ந்தது. 

நேற்று காலை நிலவரப்படி அணைப் பகுதிகளில் 5 செ.மீ மழையும், அடிவாரத்தில் 2 செ.மீ மழையும், பதிவாகி இருந்தது. அணையின் நீர்மட்டம் 20.24 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர அளவு அதிகரித்து வருகிறது. எனவே அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது. நேற்று 6 கோடியே 60 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. இதில் ஆறு கோடி லிட்டர் கோவை மாநகரப் பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து பேசிய அதிகாரிகள்,சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணை வேகமாக நிரம்பி விடும். இன்னும் அதிக மழை பெய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். நடப்பாண்டு கோவை மாநகரத்திற்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்காது என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவை மாவட்டத்தில் கடந்த 1929ம் ஆண்டு கட்டப்பட்டதுதான் சிறுவாணி அணை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இந்த அணை கேரள மாநிலம் வசம் சென்றது. கேரள அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சிறுவாணி அணையில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

இந்தத் தண்ணீரை சிறுவாணி அணையில் இருந்து எடுத்து தமிழக எல்லையில் சிறுவாணி அடிவாரத்தில் சுத்திகரிப்பு செய்கிறது பொதுப்பணித்துறை. பல்வேறு சுத்திகரிப்பு நிலைக்குப் பிறகு சிறுவாணி நீர்  கோவை மாநகரின் ஒரு பகுதிக்கும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow