மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள்... அரசை நோக்கி கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்...
தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று அறிக்கை தாக்கல் செய்ய, சமூக நலத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2011 ஆம் ஆண்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்கள், நடைமேடை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே தங்கியுள்ளதாகவும், இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும், ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, “மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு இல்லமாவது, அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அவ்வாறு மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா? இல்லை எனில் எல்லா மாவட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கான இல்லங்களை அமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்? இது குறித்து, சமூக நலத்துறை செயலர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?