17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை புகார்... கர்நாடகா Ex. CM எடியூரப்பா மீது போக்சோவில் வழக்கு...
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றபோது, அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி குற்றம்சாட்டியுள்ளார். தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் கூற வேண்டாம். உனக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் அச்சிறுமி புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீதான இந்த புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "நேற்று இரவு 10 மணியளவில், எடியூரப்பா மீது ஒரு பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உண்மை தெரியும் வரை, நாங்கள் எதையும் கூற முடியாது. இது ஒரு முன்னாள் முதல்வர் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயம். இதில் எந்த அரசியல் கோணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் வழங்கப்படும்." என தெரிவித்தார்.
What's Your Reaction?