பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி : நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி அவை ஒத்திவைப்பு

முக்கிய பிரச்னைகளை விட்டுவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடக உரையை நிகழ்த்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி : நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி அவை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “எதிர்க்கட்சியினர் பிரச்னைகளை முன்வைக்க வேண்டும். நாடகம் செய்யக் கூடாது. நாடகம் செய்வதற்கு வேறு இடங்கள் உள்ளன. அவையில் மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்த வேண்டும். பிகார் தேர்தல் தோல்வியின் போதே நாடகம் நடத்திவிட்டீர்கள்.” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர்  மோடிக்கு பதிலளித்து மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்ட எக்ஸ் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில், நாடாளுமன்றத்துக்கு வெளியே முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை நாடக உரையை நிகழ்த்தியுள்ளார்.

மணிப்பூர் பிரச்னை எழுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் வரை நீங்கள் அமைதியாக இருந்தீர்கள்.பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். 'வாக்கு திருட்டு' உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன, நாங்கள் அவற்றை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்.

இந்த கவனச்சிதறல் நாடகத்தை நிறுத்திவிட்டு, மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பாஜகவினர் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.சாதாரண மக்கள் வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்களை சூறையாடுதல் ஆகியவற்றால் போராடி வருகின்றனர், அதே நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தின் ஆணவத்தில் நாடகமாடி வருகின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிபி ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. குடியரசு துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில்: எங்கள் தலைவர் ஒரு எளிய குடும்பத்திலிருந்து, ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர், மேலும் அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல்தான் இதற்கான ஒரு அம்சமாக இருந்து வருகிறது, ஆனால் அவரது முக்கிய நோக்கம் சமூக சேவையாக இருந்து வருகிறது. அவர் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். சமூக சேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று மோடி கூறினார்.

எதிர்கட்சிகள் அமளி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவை தொடங்கிய நிலையில் மீண்டும் முழுக்கம் எழுப்பப்பட்டு அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை அவையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow