டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பஞ்சாப் முதல்வர்...

சுப்கரண் சிங்கின் தங்கைக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Feb 23, 2024 - 11:16
டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்த பஞ்சாப் முதல்வர்...

டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி சம்பவம் தொடர்பாக, FIR கூட பதிவு செய்யாததாக பஞ்சாப் அரசு மீது விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத்தை முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருக்கிறார்.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி, பஞ்சாப் - ஹரியானா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டபோது, 3 விவசாயிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதில் ரப்பர் குண்டு பாய்ந்து சுப்கரன் சிங் என்ற 21 வயது விவசாயி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்த விவசாயிகள், தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.  இந்த நிலையில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்க ஒப்புக்கொண்டாலும், பஞ்சாப் அரசு FIR கூட பதிவு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். சம்பவம் நடந்தது பஞ்சாப் - ஹரியானா எல்லையில் என்பதால் இருமாநில அரசுகளும் பொறுப்பேற்காமல் தட்டிக்கழித்து வருவதாகவும், இதனால் இறுதிச்சடங்கு கூட நடத்த முடியாமல் 3 நாட்களாக மருத்துவமனையில் சுப்கரன் சிங் உடல் கிடப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தின்போது, வீரமரணம் அடைந்த சுப்கரண் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் அறிவித்திருக்கிறார். சுப்கரண் சிங்கின் தங்கைக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow