ஜனநாயகன் இணையத்தில் வெளியிட்ட 9 பேரின் ஜாமீன் மனு: நீதிமன்றம் தள்ளுபடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது. பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர், ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், இந்த படத்தை ஆன்லைன், சமூக வலைதளங்களில் வெளியிட்டதில், தங்களுக்கு எந்த பயனும் இல்லை; கூகுள் ட்ரைவ் லிங்க மட்டும் பெற்றனர்; இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதால், பெரும் தொகையை ஈட்டி உள்ளனர்; புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது; இந்த சதித்திட்டத்தின் மற்ற தொடர்புகள் குறித்தும் கண்டறியப்பட வேண்டும் என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?