ஐபிஎல் : சென்னை 50-வது வெற்றி.. புள்ளிப் பட்டியலில் முன்னேறிய RCB! உற்சாகத்தில் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணியும், டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணியும் வெற்றிபெற்றன.

May 13, 2024 - 08:14
May 13, 2024 - 08:15
ஐபிஎல் : சென்னை 50-வது வெற்றி.. புள்ளிப் பட்டியலில் முன்னேறிய RCB! உற்சாகத்தில் ரசிகர்கள்

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன், கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கி, நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 61 மற்றும் 62-வது லீக் ஆட்டங்கள் நேற்று (மே 12) நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியை ராயல் சேலஞ்சஸ் பெங்களூரு அணியும் எதிர்கொண்டன. 

61-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை எதிர்கொண்ட நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து, 141 ரன்களை சேர்த்தது. ரியான் பராக் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து 142 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீண்டநேரம் நிலைத்து விளையாடி ரன்களை குவித்தார். இப்போட்டியில், ரவீந்திர ஜடேஜா ரன் எடுக்க ஓடுகையில், ஸ்டெம்பை மறைத்தபடி சென்றதாகக் கூறி, நடுவரால் அவுட்டாக அறிவிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் 18.2 ஓவர்களில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50-வது வெற்றியை பதிவு செய்தது. 

இதற்கு அடுத்ததாக நடைபெற்ற 62-வது லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை, பெங்களூரு அணி எதிர்கொண்டது. இதில் டெல்லி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி தொடக்க வீரராகவே களமிறங்க, 27 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், பெங்களூரு அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஜத் பட்டிதார் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். 20 ஓவர்களின் முடிவில், பெங்களூரு அணி, 187 ரன்கள் குவித்தது. அதன் பின் களமிறங்கிய டெல்லி அணியில், அக்ஸர் படேலை தவிர, மற்றவர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இதனால், 19.1 ஓவர்களில் டெல்லி அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முன்னேறி, பிளே ஆஃப் சுற்றில் நுழையும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 

இன்று நடைபெறும் 63-வது லீக் போட்டியில், புள்ளிப் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ள குஜராத் அணி, முதல் இடத்தில் உள்ள கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow