பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய இந்தியா.! 4ஆம் நாளிலேயே முடிவுக்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை துவம்சம் செய்த ரோஹித் படை..!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜடேஜாவின் அபார சதம மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
இந்நிலையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 91 ரன்களிலும், குல்தீப் யாதவ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், ரிட்டையர் ஹர்ட் முறையில் நேற்று வெளியேறிய ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சர்பராஸ் கான் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் 14 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசி இரட்டை சதமடித்து அசத்தினார்.
98 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 445 ரன்கள் எடுத்து 556 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து 557 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 100 ரன்களுக்குள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இங்கிலாந்து அணி வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் இங்கிலாந்து வீரர் மார்க்வுட் 15 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சர் என அடித்து அதிரடி காட்டிய நிலையில் 33 ரன்களில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய நிலையில், குல்திப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
What's Your Reaction?