அண்ணாமலை தோற்று விடுவாரா..? ஆவேசத்தில் பாஜக நிர்வாகி செய்த செயல்... அதிர்ச்சியில் கோவை
கோவையில் போட்டியிடும் அண்ணாமலை தோற்றுவிடுவார் என கூறப்பட்டதால், ஆவேசமடைந்த பாஜக நிர்வாகி ஒருவர், தனது விரலை வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். கடலூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்து வரும் இவர், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று ( ஏப்ரல் 17) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தனக்கு தெரிந்தவர்களிடம் அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளார்.
கோவையில் இருந்த சிலர் அண்ணாமலை தோல்வி அடைந்துவிடுவார் என கூறியதால், ஆவேசமடைந்தார் துரை ராமலிங்கம், அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து தனது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த உடனிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதுதொடர்பாக பேசிய துரை ராமலிங்கம், தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருப்பதாகவும், கோவையில் கடந்த 10 நாட்களாக அண்ணாமலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்ததாகவும் கூறினார். அப்போது அருகில் இருந்தவர்கள் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என கூறியதால், தான் வேதனை அடைந்ததாகவும், அதனால், அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தனது விரலை வெட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கார்வார் அருகிலுள்ள சோனார்வாடேவைச் சேர்ந்த அருண் வெர்னேகர் என்பவர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறி தனது விரலை வெட்டி காளிக்கு ரத்த அபிஷேகம் செய்தார். அது போல பாஜக நிர்வாகியும் அண்ணாமலையின் ஆதரவாளருமான துரை ராமலிங்கம் என்பவர் தனது விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த நபர் ஏன் கத்தி வைத்திருந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?