அதிமுக தற்போதைய நிலைமை - ஜெ., உதவியாளர் பூங்குன்றம் வேதனை
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்க விவகாரம், அவர் தவெகவில் சேர போவது குறித்து ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்து பூங்குன்றம் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வெளியிடுள்ள பதிவில், "ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஓர் உரையாடல்! இன்று என் மனதை மீண்டும் மீண்டும் எரித்து, எண்ணங்களை எண்ணற்ற திசைகளில் தள்ளுகிறது. நமது இயக்கத்தில் இன்று நிர்வாகியாக வலம் வரும் எனது நண்பருடன் அப்போது நான் பகிர்ந்த பேச்சுகள் இன்று நினைத்து பார்க்கும்போது வியப்பையும், வேதனையையும் ஒருசேர அளிக்கிறது.
அப்போது அவர் நடிகர் விஜய் பற்றி மிகத் தெளிவாக ஒரு கருத்து சொன்னார், "அவருக்கு அரசியல் தெரியாது... எதுவுமே தெரியாமல் ஒருவர் எப்படி வெற்றி பெற முடியும்?" அவரின் பேசும் பாணி, நம்பிக்கை, யாரோ தெரிந்த ஒருவரைப் பற்றி பேசுவது போல இருந்தது.
நான் அமைதியாக கேட்டேன். பின்னர் சொன்னேன். "இல்லை... வெளியில் அவருக்கு செல்வாக்கு பிரம்மாண்டம். தமிழகத்தை பொறுத்தவரை கலைத்துறையின்மீது மக்களுக்கு கொள்ளை காதல்.
ஒரு நடிகர் மக்கள் மனதை எட்டிப்பார்ப்பது எளிது. குறிப்பாக சிறுவயது பிள்ளைகள் அவரைப் பிடித்த கதாநாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் தன்னை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் அவரை தெரியாதவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறார். அதுவே அரசியலுக்கான முதல் படி
." உடனே அவர் மீண்டும், அதெல்லாம் அவருக்கு ஒத்து வராதுங்க..! நடிப்பு வேறு அரசியல் வேறு என்றார்.
நீங்கள் சொல்வது சரி. ஆனால் அவர் தன்னை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ளலாமே! நீங்கள் பார்த்த போது விஜய் அப்படி இருந்திருக்கலாம். நாளை அவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா! வரும்போது எல்லோரும் அரசியல் ஞானியாகவா வருகிறார்கள். எதிலும் பின் வாங்காமல், தைரியமாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக மாறினால் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்றேன்.
அவரோ உடனே மறுத்து, "அவருக்கு பூத் தெரியுமா? பூத் கமிட்டி போட தெரியுமா?" என்றார். அவரின் நம்பிக்கையைக் கேட்ட நான் எதிரே பார்த்து கேட்டேன். "சரி... உங்களுக்கு பூத் தெரியுமா? தெரியும் என்றார்.
வாக்குச்சாவடி முகவர்களை எப்படி நியமிக்க வேண்டும் என்பது குறித்து தெரியுமா? நல்லா தெரியும் என்றார்.
உங்கள் மாவட்ட அரசியல் நிலைமை என்ன? மற்ற கட்சிகளில் யார் செல்வாக்கானவர்? நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் யார் நல்லவர் கெட்டவர் என்பது தெரியுமா? இது பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர் ஆர்வம் நிறைந்த நம்பிக்கையோடு, "எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்து படித்துத்தான் இங்கு வந்திருக்கிறேன்! எனது தந்தை காலத்திலிருந்து நான் அரசியல் செய்து வருகிறேன்" என்று பெருமையாகச் சொன்னார்.
அதைத்தான் நான் அமைதியாக ஒரு கேள்வியாக மாற்றினேன். "சரி, உங்களுக்கு இவை எல்லாம் தெரியும். அந்த அறிவும் அனுபவமும் கொண்ட நீங்களே விஜயின் பக்கம் சென்றால் என்ன ஆகும்? அவர் இன்னும் வலிமையானவராக மாற மாட்டாரா? உங்களைப் போன்ற விவரம் தெரிந்தவர்கள் நம் இயக்கத்தில் இருந்து அங்கு சென்றால் நிலைமை மாறாதா? சிறிது நேரம் அமைதி தான் பதிலாக கிடைத்தது.
பிறகு சமாளிக்கத் தொடங்கினார். அப்போது நான் கூறியது ஒரு எளிய உண்மை, "நீங்கள் கற்றுக் கொண்ட அனைத்தும் அவரிடம் சென்றால், அவரின் அரசியல் நிலைமை இன்னும் உறுதியானதாகிவிடும்." இன்று காலம் தாண்டி பார்த்தால்... அந்த வார்த்தைகளே என் காதில் எதிரொலியாக ஒலிக்கின்றன. இப்போது வெளியில் நடப்பதை கேட்டு நான் மகிழ்வதா? அழுவதா? என்று கூட தெரியவில்லை" என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?

