அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு

பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். 

அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்கின் விசாரணையை மார்ச் 15ம் தேதி ஒத்திவைத்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், ஆவினங்குடி பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் மண் ஆள்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சிவசங்கர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடந்த தேர்தலில் சிவசங்கர் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார். பின்னர் அவருக்கு திமுக தலைமை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டர். பின்னர் துறை மாற்றப்பட்டு தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட 33 பேர் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது:-

அ.தி.மு.க ஆட்சி காலத்தில் குன்னம் தொகுதியில் சுடுகாடு பகுதியில் அத்துமீறி மணல் அள்ளியதால் அனைத்து கட்சி சார்பிலும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம்.இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது.

 தற்போது நிதி நிலைமை அனைவருக்கும் தெரியும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிதி நிலைமையிலும் முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வருகிறார்.

 மத்திய அரசு நம்மிடம் இருந்து நிதியை வசூல் செய்து வரும் நிலையில் மீண்டும் நிதியை சரியான முறையில் தருவதில்லை. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார்.

முதலமைச்சர் வழங்கும் நிதியால் தான் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுகிறது. இது மட்டுமின்றி மகளிர் கட்டணம் இல்லா பயணம், மாணவர்களின் கட்டணமில்லா பயணம், டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருவதால் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 

மேலும் மாதம் முதல் தேதியில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். 

மேலும் போக்குவரத்துத்துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை. பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

 பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். 

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொங்கலுக்குப் பிறகு முழுமையாக அனைத்து பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது” எனக் கூறினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow