காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய செங்கோட்டையன் - தவெகவா ? திமுகவா? யூ டர்ன் அடிக்கும் செங்கோட்டையன் ?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன். தனது ஆதரவாளர்களுடன் நாளை விஜய் முன்னிலையில் நாளை தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் அமைச்சர் சேகர் பாபு செங்கோட்டையனை சந்தித்து பேசி திமுகவுக்கு அழைத்து விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்தினார். இதனால் அவரது கட்சி பதவியை எடப்பாடி பறித்தார். இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தியன்று, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி அவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்
அதுமட்டுமின்றி செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட பலரதுபதவியை எடப்பாடி பறித்தோடு, அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
அதிமுகவில் நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுடன் அனைவருடன் செங்கோட்டையன் தலைமையில் நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளனர். முன்னதாக தலைமைசெயலகம் வருகை தந்த செங்கோட்டையன் தனது காரில் அதிமுக கொடி போட்டிருந்தார். தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திரும்பும் போது காரில் வந்த செங்கோட்டையன், திரும்பிச் செல்லும்போது அதிமுக கொடியை அகற்றிவிட்டு காரில் சென்றார்.
இதனிடையை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையன் சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும், தவெகவிற்கு பதில் திமுக இணைய வேண்டும் என செங்கோட்டையனுக்கு அவர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் செங்கோட்டையன் தவெக அல்லது திமுகவில் இணைவாரா என்ற கேள்விக்கு நாளை காலை விடை தெரிந்துவிடும்.
What's Your Reaction?

