‘’ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும்’’ எதிர்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தல்
2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். இதற்கு அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே, இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக, “ஜனநாயகம் சட்டமன்றத்தில் செத்துப் போச்சு”என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது ;அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. கொலை நிலவரம் வெளியாகும் அளவுக்கு மோசமான சூழல். தமிழ்நாடு போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உருவாகிவிட்டது.
இதைத் தடுக்க இந்த அரசை பலமுறை வலியுறுத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்” என்றார் இபிஎஸ்.
அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த இபிஎஸ்,
கேள்வி: ஆளுநர் வெளியேறிய பின்னர் பேசிய முதல்வர், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கப்படும் என்ற விதியை மாற்ற இருப்பதாகச் சொல்லி இருக்கிறாரே?
இபிஎஸ்: இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் இவரைப் பற்றி இவரே கற்பனை செய்துகொள்கிறார். எதுவுமே இதுவரை நடந்ததில்லை. ஆளுநர் சொல்வது எல்லாம் உண்மைதானே. சட்டப்பேரவைத் தலைவரே சொல்கிறார், அமைச்சரவை தயாரித்த உரையைத் தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் என்று. அதில் என்னென்ன தவறுகள் இருக்கிறது சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? ஆளுநர் தவறான செய்தியை வாசிக்க மாட்டேன் என்கிறார், அவருடைய நியாயம் அதுதான். தமிழகத்தில் நிலவும் நிலைமையை உண்மைத்தன்மை இருந்தால் தான் பேச முடியும், தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அரசு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அதுமட்டுமல்ல, ஆளுநர் குறித்து என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தயாரித்து வந்து முதல்வர் பேசுகிறார், தீர்மானமாக கொண்டுவருகிறார். எப்படி ஆளுநர் இப்படிப் பேசுவார் என்பது அவருக்குத் தெரியும்? திட்டமிட்டு இந்த அரசு, ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதல்வர் அவர்கள் அறிக்கையை தயார் செய்து தீர்மானமாக வாசித்திருக்கிறார். மேலும், மேதகு ஆளுநர் உரையில் வேறு எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. பாரம்பரியமாக மரபு அப்படித்தான். ஆளுநர் உரை மட்டும் தான் இடம்பெற வேண்டும், ஆனால் முதல்வர் தனது கருத்துகளை இதில் பதிவுசெய்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்? இது மரபை மீறிய செயல்.
கேள்வி: ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார், ஆளுநரும் இன்னன்ன அம்சங்கள் இடம்பெறவில்லை என்ற விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றதே?
இபிஎஸ்: முரண்பாடு இல்லை, உண்மையை எழுதவில்லை என்கிறார். நான் படிக்கின்றபோது நீங்கள் செய்த தவறை சரியென்று நான் படிக்க மாட்டேன் என்று சொல்கிறார் இதுதான் பிரச்னை. நடைபெறும் சம்பவங்கள் நிறைய நான் சொன்னேன், பாலியல் வன்கொடுமை, தொழில் முதலீட்டில் தவறான புள்ளி விவரத்தைக் கொடுக்கிறீர்கள், இதை நான் வாசிக்க வேண்டுமா? திருத்திக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறார். வாசிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. தமிழகத்தின் உண்மை நிலையை குறிப்பிடுங்கள் வாசிக்கிறேன் என்கிறார்.
கேள்வி: தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று தான் ஆளுநர் வெளியேறி இருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இபிஎஸ்: ஆளுநர் செயலுக்கு விமர்சனம் செய்வது சரியல்ல, முறையல்ல. நாங்கள் செய்ததும் இல்லை. நாங்கள் அதற்குள் செல்ல விரும்பவில்லை. மக்களுடைய பிரச்னையைப் பேசுவதற்குத் தான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் பிரச்னையைப் பேசத் தான் வந்திருக்கிறோம், நீங்கள் மக்கள் பிரச்னையைப் பற்றிக் கேளுங்கள் பதில் அளிக்கிறேன். தேவையில்லாத பிரச்னையை உருவாக்கி திசை திருப்பாதீர்கள். மக்களுக்கு என்ன செய்தி போய் சேர வேண்டுமோ அது சென்று சேரட்டும்!” என கூறினார்.
What's Your Reaction?

