பிரதமர் இப்படி பொய் பேசலாமா?... உண்மையை மட்டும் பேசுங்கள்... டி.ஆர்.பாலு

Feb 29, 2024 - 07:24
பிரதமர் இப்படி பொய் பேசலாமா?... உண்மையை மட்டும் பேசுங்கள்... டி.ஆர்.பாலு

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால், உண்மைகளை மறைக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, திமுக அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகளை டி.ஆர்.பாலு திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பல்லடத்தில் நடந்த 'என் மண் என் மக்கள்' நிறைவு விழா, தூத்துக்குடியில் நடந்த அரசு விழா மற்றும் நெல்லை நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, மத்திய அரசின் திட்டங்களை இங்குள்ள மாநில அரசு திட்டம் போட்டு மறைத்து வருவதாக சாடினார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியவிடாமல், ஊடகங்களை திமுக அரசு மிரட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை நோக்கி வரத் தொடங்கி விட்டார்கள் எனக் கூறிய பிரதமர் மோடி, திமுக காணாமல் போகும் என்றும் ஆவேசமாக கூறினார்.

பிரதமரின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு, மறுப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதை மறந்து அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

10 ஆண்டுக் கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு  செய்த சாதனைகளை பட்டியலிட்டிருந்தால் அவரை பாராட்டியிருக்கலாம், ஆனால், வாக்கு வங்கிக்காக பொய்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஊழலில் சிக்கி இரண்டு முறை பதவி பறிக்கப்பட்ட ஜெயலலிதாவை பிரதமர் பாராட்டியிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஜெயலலிதா பாஜகவை விமர்சித்திருப்பதெல்லாம் பிரதமர் மறந்துவிட்டாரா என்றும் அவர் வினவியிருக்கிறார்.

பேரிடர் காலங்களில் நிதி அளிக்காமல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துவிட்டு, தற்போது, பொய்களால் உண்மைகளை பிரதமர் மோடி மறைக்க நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம், வரலாற்றில் காணாமல் போய்விட்டனர், அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்து விடுவார் என்றும் டி.ஆர்.பாலு அந்த அறிக்கையில் விமர்சித்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow