பின்னலாடை தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை - ஒடிசாவில் இருந்து ரயிலில் கடத்திய வாலிபர்
ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இளைஞரை கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரிடம் இருந்த 15 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கடந்த 4 ஆண்டுகளாகத் திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதேநேரம், ரகசியமாகக் கஞ்சா வியாபாரமும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த சந்தோஷ் குமாரை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் சந்தோஷ் குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து, பின்னலாடை தொழிலாளர்களுக்கு சந்தோஷ் குமார் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?