ஸ்டாலினை நம்பி ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி - முன்னாள் அமைச்சர் தாக்கு

Feb 29, 2024 - 09:12
ஸ்டாலினை நம்பி ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி - முன்னாள் அமைச்சர் தாக்கு

பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை நம்பி செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள எம்ஜிஆர் திடலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது நகரக் கழகச் செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய வைகைச்செல்வன், “பொன்முடிக்கு எம்எல்ஏ பதவியும் போய்விட்டது, மந்திரி பதவியும் போய்விட்டது. அவருடைய தொகுதியில் அதிமுகவும் வரப்போகிறது, வரப்போகும் இடைத்தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதி அதிமுக கோட்டை என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேலும், இலாகா இல்லாத ஒரு அமைச்சர் சிறையில் இருக்கலாமா என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை நம்பி செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் சிறைக்கு செல்லவிருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் இரா. குமரகுரு, முன்னாள் அமைச்சர் ப.மோகன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.செந்தில் குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow