ஆன்லைனில் சீன நிறுவனம் இவ்வளவு மோசடியா? - வங்கி கணக்கை முடக்கிய அமலாக்கத் துறை
                                போலி நிறுவனங்கள் மூலம் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த சீன நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சீன ஆன்லைன் செயலிகள் மூலமாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெறுவது தொடர்பாக சென்னை மும்பை கொச்சி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 23 மற்றும் 24 தேதிகளில் சோதனை நடத்தியது. மேலும், சென்னை, மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் போலி நிறுவனங்கள் உருவாக்கி சீன நிறுவனம் சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமானது.
ஆன்லைன் லோன், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் பெட்டிங் தொடர்பான செயலிகளை சீன நிறுவனம் நடத்தி கேரளாவில் மியுல் கணக்குகள் எனப்படும் சட்டவிரோத பண பரிமாற்றத்திற்காக பயன்படும் வங்கிக் கணக்குகள் மூலமாக பணத்தை சேகரித்து வெளிநாட்டிற்கு பணப்பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக கிரிப்டோ கரன்சி மூலம் இந்தியாவிலிருந்து பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெளிநாட்டிற்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதும், போலி நிறுவனங்கள் மூலம், nium என்ற இந்திய நிறுவனத்தில் இருந்து அதன் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்காக பணப் பரிவர்த்தனை செய்வது போல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது பல்வேறு டிஜிட்டல் ஆவணங்களும் எலக்ட்ரானிக் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்து 123 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், பண பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட கேரளாவில் உள்ள வங்கிகளில் இருக்கும் வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            