நெல்லை மேயருக்கு எதிராக பிளாக் மெயில் செய்யும் கவுன்சிலர்கள்.. பட்டியலின பெண் கவுன்சிலர் திடீர் போர்க்கொடி
ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுவதாக கூறி நெல்லை மாநகராட்சியின் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் தினம் தினம் திடீர் திருப்பங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேயராக சரவணன் பதவியேற்றதில் இருந்தே ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சி மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். இந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்திருந்தார்.
கடந்த ஆண்டு நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி 12அம் தேதியன்று நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து ஆலோசித்தார். அப்போது, திமுகவைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நாளில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்க போனதால் அது தோல்வியடைந்தது. இன்னும் ஓராண்டு காலத்திற்கு மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். 3 மாத காலம் நெல்லை மாநகராட்சியில் அமைதியாக சென்ற நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்த உடன் புது பிரச்சினை கிளம்பியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வரும் சின்னத்தாய் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது மாமன்ற பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனக் கூறியும் தான் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் தன்னை அனைவரும் புறக்கணிப்பதாக கூறியும் உயர்ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தனது வார்டு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேயர் துணை மேயர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரிடமும் எடுத்துக் கூறியும் தற்போது வரை இதற்கு விடை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் அனைவரும் ஜாதி பார்த்து செயல்படுவதாக கூறியும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பி உள்ளார்.
தனது வார்டு பகுதியில் உள்ள எந்த ஒரு பணியையும் அதிகாரிகளிடம் செய்யச் சொன்னாலும் ஜாதியின் அடிப்படையில் அவைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை எனவும் கூறி வருத்தத்துடன் கடிதம் எழுதி மாநகராட்சி ஆணையாளருக்கு அனுப்பி உள்ளார்.
ஏற்கனவே நெல்லை மேயர் சரவணன் மீது 35 வார்டு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் தற்போது அருந்ததியர் இனத்தைச் சார்ந்த தன்னை மாமன்றம் உறுப்பினர்களோ அதிகாரிகளோ மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் கண்டு கொள்வதில்லை எனக்கூறி மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை எனக்கு எல்லை... குமரி எனக்குத் தொல்லை...' என மறைந்த தலைவர் கருணாநிதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆனால், நெல்லையே இப்போது திமுக தலைமைக்கு பெரும் தொல்லையாகிவிட்டது. உட் கட்சி பூசலால் தினம் ஒரு பஞ்சாயத்து அரங்கேறி வருகிறது.
What's Your Reaction?