செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி? -டி.கே.எஸ். இளங்கோவன் சொன்ன பதில்
செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என டி.கே.எஸ். இளங்கோவன் பதில்
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மேலும் இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், பாஜக தனக்கு கீழ் உள்ள அமைப்புகளை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை 15 மாத காலம் சிறையில் வைத்திருந்தனர். அவர் சிறையில் வைக்கப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத வழக்கு இது. மேலும், பாஜகவோடு இணக்கமாக உள்ளவர்கள், அந்த கட்சியில் சேருபவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தாலும், சலவை எந்திரத்தில் போடப்படும் துணியைப் போல சுத்தமாகி விடுகின்றனர். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக நியமிக்கும் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார் என தெரிவித்தார்.
What's Your Reaction?