மக்களவைத் தேர்தல்; திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

Mar 9, 2024 - 21:42
மக்களவைத் தேர்தல்; திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இந்த முறை திமுகவிற்கு இழுபறியாக அமைந்தது. விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக இருந்தன. ஆனால் திமுக, தமது செல்வாக்கை தக்க வைக்க, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. கடந்த தேர்தலை விட கூட்டணி கட்சிகள் அதிக சீட் கேட்டதும், திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. 

நேற்று (மார்ச் 08) விசிகவிற்கு 2 தொகுதிகளையும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியையும் திமுக ஒதுக்கியது. இந்த நிலையில், இன்று (மார்ச் 9) காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது திமுக.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கூறினார்.

முன்னதாக, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரே ஒரு மாநிலங்களவை தொகுதியை திமுக வழங்கியுள்ளதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow