மதுரைக்கு என்ன செய்தார் சு.வெங்கடேசன்?...வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்...ஆதாரத்தோடு நிற்கும் டாக்டர் சரவணன்

மதுரை மக்களவை தொகுதியில் எம்.பி நிதி மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4.34 கோடிதான் செலவழிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக வேட்பாளர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.  நிதிகளை என்ன செய்தார் என்பதை வெள்ளை அறிக்கையாக சு.வெங்கடேசன் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Apr 4, 2024 - 18:04
மதுரைக்கு என்ன செய்தார் சு.வெங்கடேசன்?...வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்...ஆதாரத்தோடு நிற்கும் டாக்டர் சரவணன்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா யானைமலை, கொடிக்குளம், மலை சாமிபுரம், புதூர்,புதுப்பட்டி, நரசிங்கம் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

முன்னதாக ஒத்தக்கடை நரசிங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சரவணன், "நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதை நான் வரவேற்கிறேன், நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஆர்டிஐ தகவலைத்தான் ஊடகங்களில் தெரிவித்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை சு.வெங்கடேசன் முறையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. சு.வெங்கடேசன் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு பெயரெடுத்துக் கொள்கிறார்.  5 வருடங்களில் 25 கோடி ரூபாய் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நிதியாக வழங்கப்படும். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 கோடி அளவிற்கு நிதி வழங்கப்பட்டது. ஏற்கனவே நான் 5 கோடி தான் செலவழித்து இருந்தார் என்று கூறினேன். 

ஆனால் 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த வெங்கடேசன் 4 கோடியே 34 லட்ச ரூபாய் நிதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். மீதமுள்ள 12 கோடிக்கு என்ன பணிகளை செய்துள்ளார் என்பதை வெள்ளை அறிக்கை மூலமாக வெளியிட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் 260 திட்டங்களில் 228 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது, அதில் 78 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் 155 பணிகள் இன்னும் முடியவில்லை, கடைசி வருடம் 72 பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2019-ம் ஆண்டில் 16 திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால்  இன்னமும் பணிகள் முடியவில்லை. சு.வெங்கடேசன் என்மீது வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல் தான் பி.காம் படித்துள்ளதாக கூறுகிறார். ஆனால் தேர்தல் அபிடவிட்வில் பன்னிரண்டாம் வகுப்பு தான் கூறப்பட்டுள்ளது என்றும் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow