மக்களை ஏமாற்றுவதை திமுக வாடிக்கையாக கொண்டு உள்ளது: எடப்பாடி பழனிசாமி சாடல்

நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றும் வேலையை திமுக செய்து வருவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 

மக்களை ஏமாற்றுவதை திமுக வாடிக்கையாக கொண்டு உள்ளது: எடப்பாடி பழனிசாமி சாடல்
எடப்பாடி பழனிசாமி சாடல்

இதுகுறித்து தனது எக்ஸ்தளப்பதிவில் கூறியிருப்பதாவது : விடியா திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!

இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.

இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும்.

அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் விடியா திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow