உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் இமாச்சல்... 15 எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட்... காரணம் என்ன?
இமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாகர் உத்தரவிட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் நேற்று(27.02.2024) நடைபெற்றது. அதில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தனர். அத்தோடு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பாஜகவுக்கு வாக்களித்ததால், அக்கட்சி வேட்பாளரான ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பாஜக எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் கண்ணிய குறைவாக நடத்தியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்து இன்று (28.02.2024) முறையிட்டிருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் அத்துமீறி செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயராம் தாகூர் உட்பட 15எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் அரசின் அங்கமாக தாம் நீடிப்பது சரியல்ல என்பதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக மாநில அரசுக்கு எதிராக ஆளுநரை சந்தித்து பாஜக எம்.எல்.ஏக்கள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜகவினர் பிற கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை விலைக்கு வாங்குவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இமாச்சலப்பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க :
https://kumudam.com/Only-3-of-voters-are-in-BJP..Dont-care-said-SP-Velumani
What's Your Reaction?