அண்ணாமலைக்கு ஒரு ஆஸ்கர் விருது பார்சேல்.. கிண்டலடிக்கும் ஜெயக்குமார்
 
                                உலகத்திலேயே பொய் சொல்வதற்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் என்றால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தான் வழங்க வேண்டும் எனவும், அவர் உலக மகா பொய்யர் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை படுதோல்வி அடைவார் என்பது அவருக்கே தெரியும் என்ற நிலையில், ஒரு லட்சம் வாக்குகளை காணவில்லை என்கிறார். அண்ணாமலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்லோருடைய விரல்களிலும் ஓட்டு போட்டதற்கான மை உள்ளது. மொத்தத்தில் உலகத்திலேயே பொய் சொல்வதற்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் என்றால், அண்ணாமலைக்குத் தான் வழங்க வேண்டும். அவர் ஒரு உலக மகா பொய்யர்.
இந்த மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டது. வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர்களும், தொடர்ந்து வாக்களித்து வருபவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்.
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தின்போது, மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி பேசியது, பிரிட்டிஷ்காரர்களின் செயலைப் போல் உள்ளது. எல்லோரும் சமம் என சட்டத்தில் உள்ளது. அனைத்து மதத்தினரும் உள்ள நம் நாட்டில், சிறுபான்மை மக்களை வேறுபடுத்தி பேசி, அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெற நினைத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற நிலையில், அவரின் பேச்சு தரம் தாழ்ந்து உள்ளது" என விமர்சித்தார் ஜெயக்குமார்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            