"உன்ன என்ன பண்றேனு பாரு..." வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் திமுகவினர் வாக்குவாதம்...!
தபால் வாக்கு பெறும் இடத்தில் திமுகவினர் இருந்ததாக புகார்
ஈரோட்டில் தபால் வாக்குகள் பெறும் இடத்தில் இருந்த திமுகவினரை அதிகாரிகள் வெளியே அனுப்பியதால், ஆத்திரமடைந்த திமுகவினர் வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 3,001 பேரிடமிருந்து தபால் வாக்குகள் பெறும் பணி இன்று (ஏப்ரல்-4) துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஜான்சி நகர் பகுதியில் தபால் வாக்குகள் பெரும் பணியின் போது, திமுகவைச் சேர்ந்த சிலர் அங்கிருந்ததாக தெரிகிறது. இதனைக்கண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் சாமுண்டீஸ்வரி, தபால் வாக்கு பெறும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் திமுகவினரை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வெளியே செல்லுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தபால் வாக்குகளை பெற்ற பிறகு வெளியே வந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் சாமுண்டீஸ்வரியிடம், திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?