நடிப்பால் மக்கள் மனதை வேட்டையாடிய டேனியல் பாலாஜி மறைவு... ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!
கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டேனியல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லனாக கருதப்பட்ட டேனியல் பாலாஜி மாராடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிறந்த டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் உறவினர் ஆவார். பாலாஜி என்பது அவரது இயற்பெயர் ஆகும். சென்னை தரமணியில் உள்ள ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்குநராக படித்து மருதநாயகம் படத்தின் தயாரிப்பின் போது புரடக்ஷன் மேனேஜராக பாலாஜி பணியாற்றியுள்ளார்.
அதன்பின், தமிழில் சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த சீரியலில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தன் காரணமாக அவரை அனைவரும் டேனியல் பாலாஜி என அழைத்து வந்தனர். அதன்பின் ஏப்ரல் மாதத்தில், காக்க காக்க போன்ற படங்களில் நடித்து டேனியல் பாலாஜி பிரபலமடைந்தார்.
குறிப்பாக இவர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் அமுதன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதைதொடர்ந்து பொல்லாதவன் படத்தில், கேங்ஸ்டர் அண்ணனின் அவசரப்படும் தம்பியா நடித்து கடைசி வரைக்கும் வில்லத்தனம் பண்ணி அசத்தினார். அதைதொடர்ந்து வடசென்னை, பிகில், பைரவா, வை ராஜா வை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டேனியல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து வரப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவர் குறித்து பேசி வருகின்றனர்.
What's Your Reaction?